
அவளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தேவதை என்றெல்லாம் சொல்லமாட்டேன்,அதுக்கும் மேலே. சரி சரி சிரிக்காதிங்க. ஆனால் நிச்சயம் அவளைப் பார்த்தால் மனம் திக்கென்று ஓர் நொடி நிற்கும். எனக்கு அப்படித்தான் இருந்துச்சு…
கோபாலபுரத்து அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. சினிமா ரசிகனான எனக்கு அவளைக் கண்ட முதல் கணம் அனைத்துமே “ஸ்லோ மோஷனில்” நகர்வது போலிருந்தது. “தட்டத்தின் மரயத்து” படம் பார்த்துள்ளீர்களா? கேரளத்தில் பயங்கர ஹிட்டான திரைப்படம். அதில் வரும் ‘ஆயிஷா’ போல்தான் அவளும்.
அவளை முதன்முறை பேருந்தில் தான் கண்டேன்.பன்னிரண்டாம் வகுப்பின் கடைசித் தேர்வு அன்று.எப்பொழுதும் ஆட்டோவில் வீடு செல்லும் நான், அன்று பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.சக தோழிகளுடன் முன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். நானோ அடித்துப் புடித்து கம்பிகளுக்கு இடையே பின்னிருக்கையில் சிக்கியிருந்தேன். ஃப்ளோரல் குர்த்தி, அதுக்கு மேட்சிங்காக வெள்ளை பர்தாவும் அணிந்திருந்தாள். காலையில் போட்ட லிப்ஸ்டிக் மங்கிய படி, மையிட்ட விழிகள் துழாவ ரோட்டை வேடிக்கை பார்த்தபடியே வந்தாள்.
அன்று வீட்டிற்கு வந்த பின்பும் ஏனோ அவள் விழிகள் என் விழிகளை விட்டு அகலவில்லை. பேருந்திலே அதிகம் பயணிக்காத நான், அவளைக் காண மட்டுமே பயணிக்க ஆரம்பித்தேன். நாட்கள் ஓடிச்செல்ல, நானோ பின்னிருக்கையில் இருந்து நகர்ந்தபாடில்லை.
எட்டி எட்டி பார்ப்பதோடு சரி.. ஆனால் பெயர் கூட அறிந்திருக்கவில்லை…”ஃப்லேம்ஸ்” கூட போட்டு பாக்க முடியலைங்க. பேச வாய்ப்புகிட்டினால் கூற கவிதையெல்லாம் எழுதியிருந்தேன், ஆனால் என்னவென்று அவளை நான் அழைப்பது.. அவள் விழி மேல் கொண்ட காதலால் “கண்மணி” ஆகிப் போனாள்.
“கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே”
என கமல்ஹாசன் பாட எத்தனையோ இரவுகள் கற்பனையோடு கழிந்திருக்கின்றன. எல்லாம் வண்ணமயமாய் தோன்றிய வசந்த காலம் அது. அவளே அதின் முதல் பூ…
நாட்கள் மாதங்களாக, பள்ளி மாணவன் காலேஜ் சேர்ந்திருந்தேன். அவளுக்காகவே பையில் ஒரு சீப்பு, குட்டி செண்ட் பாட்டில் எல்லாம் வைத்திருந்தேன்… ஆனால் நான் ஒருவன் உள்ளதை அவள் நிச்சயமாய் அறிந்திருக்கவில்லை. நானும் அவளை விட்டபாடில்லை.
என் செய்கைகள் யாவும் என் நண்பர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது போல. ஒருநாள் கையும் களவுமாக சிக்கிக் கொண்டேன். குற்றவாளியைப் போல் விசாரித்தார்கள். எல்லாவற்றையும் அறிந்த பிறகு, அவர்களின் கூத்தாட்டத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.. என் கதையில் என்னை விட ஆர்வம் காட்டிய ஆட்கள் அவர்கள் தான்.
என்றும் போல் அன்றும் பின்னிருக்கையில் அமர்ந்தவாறு அவளை நோக்கிக்கொண்டிருந்தேன். மயில் நீல புடவை, சிறு வெள்ளி செயின், கம்மலை மறைத்த தங்க நிற “தட்டம்” (முஸ்லிம் பெண்கள் அணிவது), கையில் கருப்பு டைட்டன் வாட்ச் என கண்ணைக் கட்டிவிட்டாள் கண்மணி.
அவள் படிக்கும் சித்தூர் அரசு கலைக்கல்லூரிக்கு முன்பே என் நிறுத்தம் வந்துவிடும். அன்று என் நிறுத்தத்தில் இறங்கலாம் என எத்தனித்த பொழுது.. தோளின் மீது யாரோ அழுத்துவது போலிருந்தது.
“மச்சா இன்னைக்கு ஒழுங்கா சொல்லிருடா…” என அருகில் அமர்ந்தபடி காதுக்குள் கிசுகிசுத்தான் சுனில், என் சிறு வயது நண்பன். அவனோடு மற்ற சிலரும் இருந்தனர். நானோ நிச்சயமாய் முடியாதென மறுத்துவிட்டேன்.
“கேவலம் எத்தன மாசமா சுத்தற, ஒரு பேராச்சி தெரிஞ்சுதா உனக்கு? இன்னைக்கு என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ, அவகிட்ட உன் லவ் சொல்ற…”
“ இவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். நம்மலே சொல்லிடலாம் மச்சா”
என் வாயை இரண்டு பேர் பொத்திக்கொள்ள, சுனில் கத்தியது இன்னும் காதினில் ஒலித்துக் கொண்டே உள்ளது.
“ஹே… ஃப்ளு சேரி பொண்ணே…. ஹே….இவன் உன்ன லவ் பண்றானாமா” என கத்தியபடியே என் பக்கம் கையைக் காட்டினான். அவமானத்தில் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
அவள் மட்டும் திரும்பவில்லை, ஒட்டுமொத்த பேருந்தே என்னைத் தான் வெறித்தது. அவர்களின் பார்வையில் ஒரு பதற்றமும் அருவருப்பும் ஒரு சேர இருந்தது. ஆனால் அதையெல்லாம் நான் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. அவளின் கண்களை உணர்ச்சி இன்றி எதிர்பார்த்திருத்தேன்.
என் வாழ்நாளில் அவள் என்னைக் காணும் முதல் முறை என்று நினைக்கிறேன்… முதல் சந்திப்பே கலேபரம் தான். என்ன நினைக்கிறாள் என்று கூற முடியாத மையிட்ட பார்வை… அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி வேகமாக நடந்து சென்றாள். அவள் நிலையில் நான் இருந்திருந்தால் அங்கேயே அழுதிருப்பேன். ஆனால் அவள் அப்படியல்ல… அன்று வெள்ளிக்கிழமை, அடுத்த இரண்டு நாட்கள் கல்லூரி விடுமுறையாகும். அவளை காணவும் குற்ற உணர்ச்சி, காணாதிருத்தலும் குற்ற உணர்வு தான்.
அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். திங்கட்கிழமை எப்படியாவது மன்னிப்பு கேட்டு விடவேண்டும் என்ற எண்ணம். அந்த சுனில் அதன்பின் என் கண்ணில் படவே இல்லை.. அவன்மேல் எனக்கு இருந்த ஆத்திரத்திற்கு அன்று பேருந்திலேயே அறைந்துவிட்டேன். இருவர்மேலும் தவறு உண்டுதான். சரி, நம் கதைக்கு வருவோம்.
திங்கட்கிழமை காலையில் என்றும் இல்லாமல் அரை மணி நேரத்திற்கு முன்பே நிறுத்ததிற்கு சென்றுவிட்டேன்.
அவள் எப்பொழுதும் வரும் பேருந்து தூரத்தில் தெரிந்தது.. அவசர அவசரமாக மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன். பேருந்து கண்டக்டர் “இவனா..கடவுளே” என்பது போல ஒரு பார்வை பார்த்தார். உள்ளே எப்பொழுதும் நிற்கும் கம்பிக்கு அருகே நின்றபடி அவளை துலாவ ஆரம்பித்தேன்…
டிக்கெட் வாங்கும்படி கூறிக்கொண்டே வந்த கண்டக்டர், “அந்த புள்ள இன்னைக்கு வரல” என்று முறைத்தபடியே கூறினார்.. அடுத்த நாள் நிச்சயம் வருவாள் என்று நினைத்தேன்… ஆனால் நீங்கள் நினைத்தவாறே அவள் அதன்பின் என்றும் வரவில்லை. அவள் தோழிகளிடம் முடிந்த அளவிற்கு விசாரித்தேன்.. உண்மையை அவர்கள் என்னிடம் கூறவில்லை.
“நாளைக்கு வருவா”
“கொஞ்சம் ஒடம்பு சரியில்ல”
“ஊருக்கு போயிருக்கா”
“இனி வரமாட்டா”
நாட்கள் செல்ல செல்ல நினைவுகள் மங்க ஆரம்பித்தன. வருடங்கள் உருண்டோடின.. அதன்பின் பல பெண்களைப் பார்த்தேன்…ஒருத்தியைக் காதலித்தேன்,மணந்தேன்.. குட்டி தேவதையின் தந்தை ஆனேன். அவள் பெயர் “கயல்”… ஆனால் கண்மணி என்றுதான் அழைப்பேன். வேலையின் பாரமும் குடும்ப பொறுப்புகளும் கால சக்கரத்தை வேகமாக சுழற்றி விட்டது போல. வயதாகிவிட்டது என்று நரை உணர்த்தியது. சமயங்களில் பழைய நினைவுகள் மனதைத் தூசி தட்டும், அப்பொழுதெல்லாம் மனைவி கலாய்ப்பாள். “என்ன காதலிய நினைச்சு ஃபீலிங்-ஆ சார்” , “ஆனாலும் பேரே தெரியாம லவ் பண்ணியிருகிங்க போங்க, என் ஆளு பேரு ராஜேஷ் தெரியுமா” என்று குலுங்கி குலுங்கிச் சிரிப்பாள். கயலும் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டாள். மகளில்லாமல் வீடு வீடு மாறியே இல்லை, அதுமட்டுமின்றி நகர் புற வாழ்க்கை வெறுத்து விட்டது. அதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செம்மன்சேரிக்கு குடி பெயர்ந்தோம். இதற்கு இடையில் கொரோனா உலகத்தையே ஆட்டிப் படைத்துவிட்டது. புதுப் புது வாழ்க்கை முறைகள், வேதனைகள் என அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
பல வருடங்களுக்குப் பிறகு,
மனைவி காலையிலேயே காய்கறி வாங்கி வரச் சொல்லியிருந்தாள். மதியம் 3மணிக்கு கடைகளெல்லாம் சாத்திவிடுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக… அருகில் இருந்த மளிகைக் கடையில் பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு, பெட்ரோல் போட்டுவிட்டு செல்லலாம் என வந்தேன். ஆட்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. 100 ரூபாய்க்கு போட்டுவிட்டு ஏடிஎம் கார்டை நீட்டினேன்.
“அக்கா, அந்த கார்டு மெசினை எடுத்துட்டு வாங்க” என்று மலையாளத்தில் கத்தினான். வந்த பெண்மணியைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்துப்போனேன். அவள்தான், அவளேதான்… வயதாகி முகமெல்லாம் சுருக்கத்தால் நிரம்பியிருந்தது. அந்த சின்ன வயசு தேஜஸ் எல்லாம் போயாகிவிட்டது, இருந்தும் அவள்தான் என்று பார்த்த கணமே புரிந்தது.
“நான்.. நான் தாங்க…நியாபகம் இருக்குங்களா” சற்றே தயங்கியவாறு கேட்டேன். அடையாளம் கண்ட அடுத்த கணமே உள்ளே அறையை நோக்கி ஓடினாள். ஏதேதோ எண்ணங்கள் சட்டென்று நெஞ்சை ஏதேதோ செய்ய, அசைவற்று சிலையாய் நின்றேன்.
“ஸார் கொஞ்சம் வண்டிய தள்ரிங்கலா… எங்களுக்கும் வேலை இருக்கு” பின் நின்றவர் எரிச்சலுடன் கத்தியதைக் கேட்டு சுயநினைவிற்கு வந்தேன். காலால் உதைத்த படியே வண்டியை நகர்த்தி, அந்த திசையில் மீண்டும் ஒருமுறை பார்த்த பொழுது, அவள் வேகமாக வந்துகொண்டிருந்தாள்.
“நல்லாருகிங்களா?”
“ஹும்”
கையில் சிறு தாளைத் திணித்துவிட்டு கண்ணீரைத் துடைத்தபடியே நடந்து சென்றாள்.நானும் கண்களைக் கசக்கியவாறு காகித்தத்தைப் பிரித்தேன்.
“ என் பேரு அமீனா…
-இப்படிக்கு முன்னாள் காதலி “
கண்களில் நீர் தாரைத் தாரையாக வழிந்தது…. அழுதபடியே சிறு புன்னகைப் பூத்தேன்… பதின்பருவ காதல் வாடிய பூவாய் மணந்தது. பைக்கை வேகமாக சாலையில் செலுத்த, கண்ணோடு ஒட்டிய நீர்த்துளி காற்றில் ஆனந்தமாய் பறந்தது,என்னைப்போலவே…..
-சுதந்திரா